மூடு

வரலாறு

தொல்பழங்காலம்

தமிழ்நாட்டின் முக்கிய மலைத்தொடர்களில் ஒன்றான கிழக்குத் தொடர்ச்சி மலைதொடரில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதியின் கிழக்குப்பகுதியில் தென்வடக்காக நீண்ட பரப்பில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இம்மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, செய்யாறு, கமண்டலநாகநதி, மற்றும் பாலாறு ஆற்றுப்பகுதிகளில் பல அரிய தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ள பில்லாந்தாங்கல் கிராமத்திலிருந்து பாலாற்றுக்கு செல்லும் கால்வாய் அருகே அண்மையில் பழங்கற்காலத்தைச் சார்ந்த வெட்டுக்கருவிகள், கைக்கோடரிகள், கத்திகள், சுரண்டிகள் போன்ற கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தின் ஜவ்வாதுமலைத்தொடரில் அமைந்துள்ள பல பாதிரி, கீழானூர் ஆகிய கிராமங்களில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து வேளாண்மை செய்யத் தொடங்கிய காலமான புதிய கற்காலத்தைச் (Neolithic period tools) சேர்ந்த கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்டராம்பட்டு வட்டம் தானிப்பாடி அருகே உள்ள மோட்டூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இவை சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இங்குள்ள கல்வெட்டுகளில் ஒன்றில் தாய்த் தெய்வக் கல் என்றழைக்கப்படுகின்ற மனித உருவமுடைய பெரிய கற்பலகை (Anthropomorphology figure) காணப்படுகிறது. தலை அற்ற மனித உருவத்தைப்போல் அமைந்த இக்கல் இம்மாவட்டத்தின் முக்கிய தொல்லியல் ஆதாரமாக திகழ்கின்றது. ஜவ்வாது மலையில் உள்ள கீழ்சிப்பிலி, மேல்சிப்பிலி என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த கல்திட்டைகள் (Dolmens) காணப்படுகின்றன. இவை வாலியர் குகை என்றும் குள்ளர் குகை என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் வீரணம், தானகவுண்டன்புதூர், சம்பந்தனூர், தொண்டமானூர் போன்ற இடங்களில் பெருங்கால நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.

சங்ககாலம்

பண்டைக்காலத்தில் தொண்டைநாடென்றும் இடைக்காலத்தில் நடுநாடென்றும் அழைக்கப்பட்ட பகுதிகள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சங்க காலத்தில் தொண்டைநாடு என்று அழைக்கப்பட்ட வட தமிழகத்தின் ஒரு பகுதியே தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம், இடைக்காலத்தில் நடுநாடு என்றழைக்கப்பட்ட பகுதியில் திருவண்ணாமலை, செங்கம் போன்ற பகுதிகள் இருந்தன. சங்ககால  இலக்கியமான பத்துப்பாட்டில் இடம்பெற்ற மலைபடுகடாம் என்ற நூலில் பல்குன்றக்கோட்டத்தைச் சேர்ந்த செங்கத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் நன்னன்சேய் நன்னன் ஆண்டதாக குறிப்பிடுகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வகை பல அரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள், நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. நன்னன் ஆட்சிக்குட்பட்ட நவிர மலை என்பது தற்போது ஜவ்வாதுமலை பகுதியைக்குறிக்கும் என்று சிலரும் கடலாடிக்கு அருகிலுள்ள பர்வதமலையைக்குறிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்பெண்ணையாற்றின் இருபுறங்களிலும் பல்வேறு தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோயிலூர் வட்டத்தைச் சாந்த ஜம்பை என்ற கிராமத்தில் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த  தமிழ் கல்வெட்டொன்று கண்டறியப்பட்டது. இதில் சதியபுத அதியமான் நெடுமான் அஞ்சி ஈத்தபாளி என்ற ஒருவரி கல்வெட்டானது தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் குறிப்பிடப்படும் அதியமான் என்பவன் தென்பெண்ணையாற்றை ஒட்டிய பரப்பில் ஆட்சிபுரிந்தவனாவான்.

சங்ககாலத்தில் தமிழகத்தின் மேற்குப்பகுதியினை கிழக்குப்பகுதியுடன் இணைக்கும் பகுதியாக செங்கம் கணவாய் அமைந்திருந்தது. இப்பகுதியில் ஆட்சிபுரிந்த மற்றொரு குறுநில மன்னன் ஆட்சிப் பகுதியான ஆண்டிப்பட்டியில் அகழாய்வு மேற்கொண்டதில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய்தெய்வ உருவங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை, காளை உருவங்கள், பானை ஓடுகள், தமிழ்பிராமி எழுத்து ஓடுகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் 143 ஈயக்காசுகள் கிடைத்தன. இக்காசுகளில் தமிழ்பிராமி வடிவத்தில் அதின்னன் எதிரான் சேந்தன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்காலம்

காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளன. பல்லவர்களே தமிழ்நாட்டில் முதலில் கோயில்கள் அமைத்த பெருமைக்கு உரியவர்கள், வெம்பாக்கம் வட்டம் மாமண்டூரில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு குகைக்கோயில்கள் உள்ளன. இதன் அருகில் மகேந்திரவர்மன் ஏற்படுத்திய சித்திரமேகதடாகம் என்ற பெரிய ஏரி அமைந்துள்ளது. இக்கோயில் அரிய கல்வெட்டுகளும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்து கல்வெட்டுகளும் உள்ளன.  இதைப்போன்ற மற்றொரு குடைவரை குரங்கணில் முட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது. வந்தவாசி வட்டம் தேசூர் அருகே சீயமங்கலம் என்ற இடத்தில் ஸ்தம்பேஸ்வரர் கோயில் சிறந்த குடைவரையாகவும் அரிய வரலாற்றுத் தகவல்களையும் கொண்டுள்ளது. பல்லவர் ஆட்சி முடிவு பெற்று சோழர்கள் ஆட்சி அமைக்க தெள்ளாற்றுப் போர் முக்கியக் காரணம் ஆகும். இந்த தெள்ளாறு என்பது தற்போது வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ளது.

6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்துடன் கூடிய நடுகற்கள் செங்கம், தண்டராம்பட்டு பகுதியில் நிறைய கிடைக்கின்றன. இந்நடுகற்களில் பயன்படுத்தப்படும் வட்டெழுத்துத் தமிழ், அக்கல்வெட்டுகளில் பயின்று வரும் குறு நில மன்னர்கள் பற்றிய செய்திகள் தமிழக வரலாற்றின் முக்கிய ஆவணமாக விளங்குகின்றன.

சோழர்காலம்

பல்லவர்களுக்குப்பிறகு அமைந்த சோழர் ஆட்சியில் தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு பரப்பும் அடங்கியிருந்தது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் அதிக அளவில் ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன. இவைகளைப் பாதுகாக்கவும் மராமத்து பணிகளை கவனிக்கவும் உரிய ஆணைகள் பிறப்பித்த செய்திகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆவூர், திருவண்ணாமலை, தாமரைப்பாக்கம், திருமலை, பழங்கோயில், செங்கம், திருவோத்தூர், பிரம்மதேசம் கூழமந்தல், மடம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோயில் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சிறப்புவாய்ந்த கோயில்கள் ஆகும்.

பாண்டியர்கள் மற்றும் ஹோய்சாலர்கள்

தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகள் பாண்டியர் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. திருவண்ணாமலை கோயில், மடம் கோயில் ஆகியவற்றில் பாண்டியமன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவர்கள் காலத்தில் எழுப்பப்பெற்ற கோயில்கள் ஏதும் இல்லை என்றாலும் பாண்டிய மன்னர்களால் அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய செய்தி பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள விக்ரம பாண்டியன் திருவீதி கல்வெட்டு பாண்டியர் காலத்தின் முக்கிய ஆவணமாகும்.

திருவண்ணாலை மாவட்டத்தின் இடைக்கால வரலாற்றில் பிரிக்க முடியாத பெயர் வல்லாள மகாராசன் என்கிற வீரவல்லாளன் ஆகும். இவர் காலத்தில் திருவண்ணாமலை துணைத்தலைநகராக இருந்தது. திருவண்ணாமலையார்  எனப்படும் அண்ணாமலைக்கோயிலின் மூலவருக்குத்  தந்தையாகப் போற்றப்பட்டவர். கண்ணனூர்  கொப்பத்துப் போரில் கொல்லப்பட்ட நிலையில், இன்றளவும் ஆண்டுதோறும் திருவூடல் நிகழ்வின் நிறைவில் இறப்புச் செய்தி வருவதாகவும், மாசிமகத்தன்று  அண்ணாமலையார் திருமேனி சம்பந்தனூருக்கு எடுத்துச்செல்லப்பட்டு,  தந்தையாகிய வீரவல்லாளனுக்குத் திதிகொடுப்பதாகவும், சடங்கு நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சம்புவராயர்கள் காலம்

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்றவுடன் அவர்களுக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் அவர்கள் ஆட்சி செய்த பகுதியின் மன்னர்களான முடிசூடிக்கொண்டனர். அவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் சம்புவராயர்கள், இவர்களின் ஆட்சிப்பகுதி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வரை பரவியிருந்தது. குறுகிய காலமே இவர்கள் ஆட்சி செய்திருந்தாலும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றனர். இவர்கள் ஆண்ட பகுதியான படைவீட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கோட்டைகள், கோயில்கள், நாணயங்கள், நகை ஆபரணங்கள் ஆகியன கிடைத்துள்ளன.

பிற்கால தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வு குமார கம்பணாவின் மதுரை போர் ஆகும். குமார கம்பணாவின் படையெடுப்பை சந்தித்த ஊர் படவேடு ஆகும். சம்புவராயர்ளுக்கும் விஜய நகர பேரரசின் குமார கம்பணாவிற்கும் இடையே கி.பி. 1363 இல் போர் நடைபெற்றது. இப்போரில் சம்புவராய அரசன் இராஜநாராயணன் கொல்லப்பட்டான். தமிழகத்தில் விஜயநகர பேரரசின் ஆட்சி அமைக்க வழிகோலியது இந்நிகழ்வாகும். குமார கம்பணா மதுரையை சுல்தானிடமிருந்து மீட்டபிறகு தமிழகம் விஜய நகர பேரரசு அமைத்த நாயக்கர்களின் வசம் வந்தது. தமிழகத்தில் வேலூர், செஞ்சி, தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆட்சி தொடங்கியது.

விஜயநகர பேரரசு காலம்

கி.பி. 1565 இல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர பேரரசு வீழ்ந்தது. அதன்பிறகு தமிழகத்தை ஆண்டு வந்த நாயக்கர்கள் சுதந்திர அரசர்களானார்கள். விஜயநகர பேரரசு காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பண்பாட்டு மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. இவர்கள் காலத்தில் வேளாண்மை, நெசவு முக்கியத்துவம் பெற்றன. திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில், தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி கோயில், நெடுங்குன்றம் இராமச்சந்திரபெருமாள் கோயில் ஆகியன கட்டப்பெற்றன. இக்கோயில்களில் நீண்ட மதில்கள், கல்யாண மண்டபம், ராஜகோபுரம், எழிலார்ந்த சிற்பங்கள் என கோயில் கட்டிடக்கலையின் மகுடமாக திகழ்ந்து வருகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்

முகலாயர்கள் காலத்தில் பல போர்களும் கலகங்களும் இப்பகுதியில் ஏற்பட்டன. முகலாயர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் கி.பி. 1693 இல் நடைபெற்ற  தேசூர் போர், கி.பி. 1696 நடைபெற்ற ஆரணி போரும் முக்கியத்துவம் வாய்ந்தன. நாயக்கர்கள் ஆட்சிக்காலத்திலேயே ஆங்கிலேயர்களின் ஆட்சியும் மெல்ல மெல்ல பரவிவந்தது. இக்காலகட்டத்திலும் பல போர்கள் நடைபெற்றுள்ளன. பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பு, மராட்டியர்கள் படையெடுப்பு ஆகியவற்றின் தடங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கர்னாடகப்போரிலும் மைசூர் போரிலும் ஒரு பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 1751 ராபர்ட் கிளைவ் தலைமையில் ஆரணியில் போர் நடைபெற்றது.  கர்னாடகப்போரின் ஒரு பகுதியான வந்தவாசி போர் கிபி. 1760 இல் வந்தவாசியில் நடைபெற்றது. இப்போரில் பிரன்ஞ் தளபதி கவுண்டி லாலியை ஆங்கிலேய தளபதி சர் அயர்கூட் வென்றார். இப்போர் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியை உறுதியாக நிலைநிறுத்த உதவியது. மைசூர் போரின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மலையிலும் செங்கம் கணவாயில் ஹைதர் அலிக்கும் ஆங்கிலப் படைகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது.

ஆற்காடு நவாப் ஆண்ட பகுதிகள் 1800 வாக்கில் கிழக்கிந்திய கம்பெனியின் வசமானது. கிழக்கிந்திய கம்பெனி நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை உருவாக்கினர். அவ்வாறு 1801  ஆண்டு வடஆற்காடு மற்றும் தென்னாற்காடு மாவட்டங்கள் உருவாகின. பிறகு பல முறை மாவட்ட எல்லைகள், வட்ட எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு 1911 ஆண்டு வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டும், தென்னார்காடு மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை வட்டத்தை பிரித்தும் வடஆற்காடு மாவட்டத்துடன் இணைத்தும் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன.

விடுதலைக்குப்பிறகு

அதன்பிறகு 1989 ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என புதிய மாவட்டம் உருவாகியது. இம்மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தாவசி என 6 வட்டங்கள் இருந்தன.  1997 சம்புவராயர் என்ற பெயர் மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விடுதலைக்குப்பிறகு கல்வி, மருத்துவம் மற்றும் இதர அரசு சேவைகள் வளர்ந்துவந்தன. தற்போது திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, திருவண்ணாமலை, செய்யார், தென்னாங்கூரில் அரசு கலைக்கல்லூரி, காரப்பட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் அமைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் வேளாண்மை, பட்டு நெசவு முக்கிய வாழ்வாதாரமாகும். இவைதவிர சிறு தொழிற்சாலைகளும், சர்க்கரை ஆலைகளும், செய்யார் சிப்காட் தொழிற்போட்டையில் தோல் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைந்து இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்கின்றன.

இம்மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களும், பண்டைய கால கோட்டைகள், அருணகிரிநாதர், அப்பைய தீட்சிதர், சைவ எல்லப்ப நாவலர் உள்ளிட்ட ஆன்றோர்களும் சமண சமய ஆன்றோர்களும் அவதரித்த புண்ணிய பூமியாகும்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை, செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குப்பநத்தம் அணை, மிருகண்டாநதி நீர்த்தேக்கம், செண்பகத்தோப்பு அணை ஆகியவை இம்மாவட்டத்தில் வளம் சேர்த்து வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் 6188 ச.கி.மீ. பரப்பும் 24,64,875 மக்கள் தொகையும் கொண்ட தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 வருவாய் கோட்டங்களும் புதியதாக உருவாக்கப்பட்ட தண்டராம்பட்டு, சேத்துப்பட்டு, வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், ஜமுனாமரத்தூர் வட்டங்கள் உள்ளடக்கிய 12 வட்டங்களாக பிரிக்கப்பட்டு  நிர்வகிக்கப்பட்டு வருகிறது.