திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து 1989 ஆம் அண்டு செப்டம்பர் 30 தேதி முதல் இயங்கிவருகிறது. இம்மாவட்டத்தின் வடக்கே வேலூர் மாவட்டமும் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டமும் தெற்கே விழுப்புரம் மாவட்டமும் மேற்கே கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளது.
நிர்வாக அலகுகள்
திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை , ஆரணி, செய்யாறு என்று 3 கோட்டங்களும் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, போளுர் கலசபாக்கம், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, ஜமுனாமரத்தூர் என மொத்தம் 12 வட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இம்மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களும், 4 நகராட்சிகளும் 10 பேரூராட்சிகளும், 860 ஊராட்சிகளையும் உடையது.
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 190 கி.மீ. தூரத்திலும், திருச்சியிலிருந்து 210 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பு 6188 ச.கி.மீ. ஆகும்.
வேளாண்மை
திருவண்ணாமலை மாவட்டம் அரிசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டமாகும். இங்கு உற்பத்தியாகும் அரிசி முதல்தரமான ரகம் என்பதால் மாநிலத்தின் பிற பகுதிக்கும், பிறமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெற்பயிர் தவிர்த்து கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களும் வேர்கடலை, சோளம், கம்பு போன்ற புன்செய் பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஜவ்வாதுமலையில் திணை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பலா, சீத்தா போன்ற பழவகைகளும் பயிரிடப்படுகின்றன. படவேடு பகுதியில் அதிக அளவு வாழை பயிரிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 56 சதவீதம் விவசாயத்தை சார்ந்துள்ளனர்.
தொழில்
திருவண்ணாமலை மாவட்டம் தொழில்சாலைகள் குறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் வேளாண்மை சார்ந்த கரும்பு சர்க்கரை ஆலைகள், செய்யார், போளூர் மற்றும் கொழுந்தம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. ஆரணி சேவூரில் லட்சுமி சரஸ்வதி பஞ்சாலை அமைந்துள்ளது. செய்யார் சிப்காட் தொழில் வளாகத்தில் காலணிகள், மோட்டார் உதிரி பாகங்கள் ஆகியன உற்பத்திசெய்யப்படுகின்றன. இம்மாவட்டத்தில் கருப்பு கற்கள், வண்ணக்கற்கள், மென்கற்கள் அதிக அதிக அளவில் கிடைக்கின்றன. இதனைக்கொண்டு கிரானைட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
சுற்றுலா
இம்மாவட்டம் ஆன்மீகச் சுற்றுலாவிற்கு புகழ்பெற்றதாகும், இம்மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில், தேவிகாபுரம் பெரியநாயகி திருக்கோயில் போன்றவை புகழ்பெற்ற திருத்தலங்கள் ஆகும். இவை தவிர சாத்தனூர் அணை, பர்வதமலை, ஜவ்வாதுமலை போன்ற பொழுதுபோக்கு சுற்றுலாத்தலங்களையும், மாமண்டூர் குடைவரைக்கோயில்கள், திருமலை ஜெயின் கோயில், கூழமந்தல், பிரம்மதேசம் போன்ற பாரம்பரிய சுற்றுலா தலங்களும் அமைந்து இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கிறது.
கல்வி
இம்மாவட்டத்தில் மொத்தம் 1798 ஆரம்பப்பள்ளிகளும், 219 உயர்நிலைப்பள்ளிகளும், 160 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவை தவிர ஜவ்வாதுமலையில வனத்துறை பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளி, ஆகியனவும் நகரங்களில் மத்திய அரசின் கண்காணிப்பில் வரும் CBSE பள்ளிகளும் மாணவர்களுக்கு கல்வி அளித்து அறிவு புகட்டி வருகின்றன. நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை , செய்யார் என இருந்த 2 கல்வி மாவட்டங்களை பிரித்து புதியதாக ஆரணி, செங்கம், போளுர் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம்
திருவண்ணாமலையில் அனைத்து பகுதியிலும் வாழும் மக்களுக்கு சுகாதாரம் பேண 417 சுகாதார துணை மையங்களும் 114 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 20 அரசு மருத்துவமனைகளும் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அமைந்து நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடை பராமரிப்பிற்கென 5 மருத்துவமனைகளும் 113 மருந்தகங்களும் உள்ளன.