மூடு

காணத்தக்க இடங்கள்

ஆன்மிகச் சுற்றுலா

அருள்மிகுஅண்ணாமலையார் திருக்கோயில்,திருவண்ணாமலை

அண்ணாமலையார் திருக்கோயில்

ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில். இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.

அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு

ரேணுகாம்பாள் திருக்கோயில்

கோயில்கள் நிறைந்த கிராமம் படவேடு என்றழைக்கப்படும் படைவீடு கிராமம். திருவண்ணாமலையிலிருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், வேலூரிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும் ஆரணியிலிருந்து 20 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. 10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களின் கீழ் குறுநில மன்னராக ஆண்டுவந்த சம்புவராயர்கள் சோழ அரசு வீழ்ச்சிக்குப்பின் தனிஅரசர்களாக அறிவித்து படைவீட்டில் சம்புவராயர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதி படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சம்புவராயர்களின் கோட்டை சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் சக்திதலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். கருவறையில் அம்மன் சுயம்பு ரூபமாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அருகில் கொண்டு உலகில் சக்தியே பிரதானம் என்பதை எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகின்றாள். பின்புறம் அம்மன் சுதை வடிவிலான திருமேனி உள்ளது. அதனருகில் ஆதிசங்கரரால் பிரதிட்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஐனாகர்ஷண சக்கமும் உள்ளது. ஜமத்கனி முனிவர் யாகஞ்செய்த இடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் ஆனீ மாதத்தில் வெட்டியெடுத்து வரப்படும் மணதான் இங்கு திருநீற்றுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் நெற்றியில் அணிந்து கொள்ளப் பிணிகள் அகலும், தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூரானது சுற்றிலும் மலைகள், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு என பசுஞ்சோலைகள் சூழ்ந்து காணப்படுகிறது.கருவறை ரேணுகா தேவியின் தலை மட்டும் சுயம்புவாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ரேணுகாதேவியை வணங்கிச் அருள் பெறுகின்றனர். இங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா விசேஷமானது.

அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்

பாண்டுரங்கன் திருக்கோயில்

வட இந்திய பாணியில் நாரக அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில் தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்து புராணங்களின்படி இது லட்சுமி தேவி அவதாரத் தலம். இந்தக் கோயில் வளாகத்தில் பூந்தோட்டங்களுடன் மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நுழைவாயிலில் பெரிய கோபுரமும் உள்ளே அமைந்துள்ள விமானம் நாகர பாணியில் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள் நிறைந்த பெரிய மண்டபம் ஒன்று உள்ளத. இந்த மண்டபத்தில் இருந்தே 10.5 அடி உயர பாண்டுரங்கன் திருவுருவச்சிலையும் 8.5 அடி உயர ரகுமாயி திருவுருவச்சிலையும் கண்டு சேவிக்கலாம். வாரத்தின் ஆறு நாட்களுக்கு பல வகை ஆடை அணிகலன்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன. இவ்வூர் வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில், தேவிகாபுரம்

பெரியநாயகி திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு அடுத்த பெரிய கோயிலாகவும் விஜயநகர கட்ட்டக்கலைக்கு சிறந்த சான்றாகவும் அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைமீதுள்ள பொன்மலைநாதர் ஆலயமும் ஆகும். இக்கோயில்களில் சுமார் 10000 க்கும் மேற்பட்ட சிற்பங்களும், 60 கல்வெட்டுகளும் உள்ளன. விஜயநகர பேரரசர் காலத்தில் புகழ்பெற்ற வணிக நகராகவும், ஆன்மிக தலமாகவும் விலங்கி வந்தது. இக்கோயில் அக்காலத்தில் ஊரின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டுள்ளது.
பெரியநாயகி அம்மன் கோயில் மதில் சுவர் , கல்யாணமண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகிய இடங்களில் சைவ, வைணவச் கதைச் சிற்பங்கள் எழிலுற அமைந்துள்ளன. தேவராக் கதைச்சிற்பங்கள், விஷ்ணுவின் அவதாரச்சிற்பங்கள், தலவரலாற்றுச்சிற்பங்கள் போன்றவை காணத்தகுந்தவை ஆகும். இக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள திருகாமேஸ்வரர் சம்மே கோகிலாம்பாள் ஆலயமும் அதன் அருகில் சுமார் 500 அடி உயர மலையில் அமைந்துள்ள பொன்மலைநாதர் திருக்கோயிலும் சிற்ப எழில் கொண்ட கோயில்களாகும்.

எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்

சனீஸ்வரர் கோயில்

ஆரணி படவேடு சாலையில் ஏரிக்குப்பம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று, சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. . நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

அருள்மிகு வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு

Fullmoonday

சைவக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம் திருவோத்தூர் ஆகும். திருஞானசம்பந்தர் தம் பாடலால் ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய அற்புதம் நடந்த தலமாகும். இவ்வூர் தற்போது செய்யாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அமைந்துள்ள வேதபுரிஸ்வரர் கோயில் இராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஆறு நிலைகளுடன் காட்சி தருகிறது – சுதை வேலைப்பாடுகள் நிறைந்துள்ளது. கோயிலின் உள்ளே வலப்பக்கம் ஒரு கல்யாணமண்டபம், இடப்புறம் திருக்குளமும் அடுத்து நந்தவனப் பகுதியும் உள்ளன. முன்னால் உள்ள மண்டபத்தின்மீது புதிதாகச் சுதை வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள் – முருகன், விநாயர், நடராஜர் – ஞானசம்பந்தரும் பனைமரமும் உள்ளன. ஆலயத்துள் நுழைந்தால் வலப்பக்கம் அம்பாள் சந்நிதி. நேர் எதிரில் இடப்பக்கம் அம்பாளுக்கு சிம்மம், கொடிமரம் உள்ளன. இவற்றுக்குப் பக்கத்தில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே கருவறையில் வேதபுரிஸ்வரர் – சிவலிங்கத் திருமேனி, கிழக்கு நோக்கிய சந்நிதி. மேலே விதானம் உள்ளது. சதுர ஆவுடையார். மூலவரைத் தரிசித்து வெளியே வந்து இடப்பால் உள்ள வழியாக வெளிச்சென்று, சண்டேஸ்வரரைத் தரிசித்து வெளி வரலாம். பாலகுஜாம்பிகை தரிசனம் தனிக்கோயில். பிராகாரம் உள்ளது. நின்ற பழைய திருமேனி. வணங்கி வெளியில் வரும்போது இடப்பால் நவக்கிரகங்கள் உள்ளன. இத்தலத்துப் பெருவிழா தை மாதத்தில் நடைபெறுகிறது.

அருள்மிகு இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம்

இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில்

புகழ்பெற்ற யோக இராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாள் இடது கையை இதயத்தின் மேல் வைத்தவாறும் அவருக்கு எதிரில் அனுமன் வேத மந்திரத்தைப் படித்துக்காட்டுவது மாதிரியும் சிற்பங்கள் அமைந்துள்ளன. மிக நேர்த்தியான வாயிற்காவலர்கள் சிற்பம் அமைந்துள்ளது. இச்சந்நிதியை அடுத்து செங்கமலவல்லி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. இதன் எதிரில் அமைந்துள்ள முக மண்டபத்தில் இராமாயண , தசாவதார சிற்பங்கள், கிருஷ்ணலீலை, கிருஷ்ணதேவராயர் சிற்பம் (கிருஷ்ண தேவராயருக்கு தனிச் சிற்பம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கதாகும்) இக்கோயிலின் அமைந்துள்ள தொங்கும் தாமரைச் சிற்பமும், ராமன் வாலி சண்டை சிற்பங்கள், கிருஷ்ணலீலை, சுக்கிரிவன் வாலி சிற்பங்கள், கிருஷ்ணதேவராயர் சிற்பம், போன்றவை கண்டுகளிக்கத்தக்கவை. விஜயநகர பேரரசர்கள் காலத்தில் கட்டப்பெற்ற இக்கோயில் அழகிய சிற்ப வேலைப்பாடும், வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்வெட்டுகளும் அமைந்துள்ளது. சேத்துப்பட்டு – வந்தவாசி நெடுஞ்சாலையில் சேத்துப்பட்டில் இருந்து 5 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

அருள்மிகு வாலிஸ்வரர், திருக்கோயில், குரங்கணில்முட்டம்

தொண்டைநாட்டு பாடல்பெற்ற தலங்களில் 6வதாக அமைந்துள்ளது. வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம் (காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு குரங்கணில்முட்டம் என்று பெயர் வழங்கலாயிற்று. கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது. இறைவன் – வாலீஸ்வரர், கொய்யாமலை நாதர், இறைவி – இறையார் வளையம்மை. ,தலமரம் – இலந்தை.தீர்த்தம் – காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு). சிறிய கருவறை. மேற்கு நோக்கிய சந்நிதி. அம்பான் சந்நிதி தெற்கு நோக்கியது. விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, துர்க்கை, பிரமன், நவக்கிரகங்கள், திருமால், பைரவர், நால்வர், சண்டேஸ்வரர் சப்தமாதாக்கள் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் பல்லவர் கால குடைவரைகோயில் ஒன்றும் உள்ளது.

அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில்,முனுகப்பட்டு

FullMoonday_mountain

முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.

ஓய்வுச்சுற்றுலா

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை 1956 ஆம் ஆண்டு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இவ்வணையின் மொத்த நீர் கொள்ளவு உயரம் 119 அடியாகும். தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. இங்குள்ள முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட முதலைகள் வளர்ந்து வருகின்றன. திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரமும் செங்கத்திலிருந்து 24 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

பர்வதமலை

Fullmoonday

சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் ஆண்ட பகுதி நவிர மலை என்பதே தற்போதைய பர்வதமலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், சவ்வாது மலைத்தொடரின் கீழ் அமைந்துள்ள இம்மலையின் மீது அபிதகுஜாம்பாள் , மல்லிகார்சுனர் கோயில் அமைந்துள்ளது. நீண்ட நெடிய இக்கோயில் மலையேறுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். குளிர்ந்த காற்றும் இயற்கை எழிலான காட்சியும் கண்டுகளிக்கலாம். யோகிகளும் சித்தர்களும் வழிபட்ட மலை என்றும் தென்கயிலாயம் என்றும் இம்மலை அழைக்கப்படுகிறது. தென்மாதிமங்கலம் அல்லது கடலாடியிலிருந்து இம்மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு. போளூரிலிருந்து 25 கி.மீ தூரமும் திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

ஜவ்வாதுமலை

ஜவ்வாதுமலை

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். , 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

மரபுச் சுற்றுலா

சமணர் ஆலயம்,திருமலை

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சமணத்திருத்தலமாகும், 23 வது சமணத்தீர்த்தங்கர்ரான நேமிநாதரின் 18 அடி உயர உருவச்சிலை குன்றின் மீது அமைந்துள்ளது. திருப்பாதங்களும் குந்தவை நாச்சியாரின் கல்வெட்டும் இக்குன்றில் அமைந்துள்ளது. குன்றிற்கு கீழ் அமைந்துள்ள மகாவீரர் ஆலயத்தில் 5 அடி உயர சுதைச்சிற்பம், தீர்தங்கர்களின் உருவங்கள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் என அற்புதமாக அமைந்துள்ளது இக்கோயில். மனதிற்கு இனிமையான, காற்றோட்டமான இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில், போளூர் ஆரணி வழியில் வடமாதிமங்கலத்தில் இருந்தும், போளுர் தேவிகாபுரம் வழியில் மட்டப்பிறையூர் அல்லது கொம்மனந்தல் வழியாகவும் செல்லலாம்

மாமண்டூர் குடைவரைக்கோயில்.

மாமண்டூர் குடைவரைக்கோயில்

தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய குடைவரைகளுள் ஒன்று. நரசமங்கலம் – மாமண்டூர் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் 4 குடைவரைகோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்கள் மகேந்திரவர்மனும் அவரது பின்வந்த அரசர்களாலும் அமைக்கப்பட்டது. வலதுகோடியில் அமைந்துள்ளது முதல் மற்றும் இரண்டாம் குடைவரை முறையே விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள 3 வது குடைவரை கருவறையில் இறை உருவங்கள் இல்லை. தென்கோடியில் அமைக்கப்பட்டுள்ளது 4வது முற்றுபெறறாத குடைவரை. வரலாற்றுச்சிறப்பு மிக்க மகேந்திரவர்ம பல்லவனின் பல பட்டப்பெயர்கரை கூறும் பல்லவர கிரந்த கல்வெட்டு, இம்மலைக்குன்றின் பின்புறம் அமைந்துள்ள சித்திரமேக தடாகத்தைப் பற்றிய குறிப்புள்ள 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு என வரலாற்றுப்பெட்டகமாக அமைந்துள்ளது இக்குடைவரைக்கோயில், இக்குன்றின் மீது வாலீஸ்வரர் கோயிலும், பைரவர் கோயிலும் அமைந்துள்ளது. குன்றின் வடகோடியில் சமணர் படுக்கையும் அது அமைந்துள்ள பாறையின் மீது திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பழைய கி.பி. முதல் ஆம் நூற்றாண்டு தமிழி கல்வெட்டும் காணலாம். வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் நரசமங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

சீயமங்கலம், குடைவரைக்கோயில்

மாமண்டூர் குடைவரைக்கோயில்

அவஜிபாஜன பல்லவனேஸ்வரம், சிம்ம விஷ்ணு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்படுகின்ற குடைவரைக்கோயில் பல்லவர் காலத்தில் குடைவரையாக மட்டும் இருந்தது பிற்கால மன்னர்களால் அர்த்தமண்டபம், முகமண்டபம், கோபுரம் என விரிவு படுத்தப்பட்டு இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் தூணாண்டார் ஆகும். இக்கோயில் தூணில் உள்ள நடராஜர் சிற்பம் தமிழகத்தில் முதல் நடராஜர் உருவம் என்று ஆய்வாளர்களால் குறிக்கப்பெறுகிறது. 30 மேற்பட்ட கல்வெட்டுகள் அரிய வரலாற்றுத்தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள குன்றில் சமணத் படுக்கையும் சிற்பமும் அமைந்துள்ளது. இக்கோயில். தேசூரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது சீயமங்கலம்.

தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்

FullMoonday_mountain

சோழர்காலத்தில் கட்டப்பெற்ற இக்கோயிலின் மூலவர் தடாகபுரிஸ்வரர் ஆவார். ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுக் குளத்தூர் என இக்கோயில் கல்வெட்டுகள் இவ்வூரைக் குறிக்கின்றன. இக்கோயில் இறைவன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1072) திரு. அக்கினீஸ்வரமுடையார் என்றும், பின்னர் இரண்டாம் இராஜராஜன் காலம் முதல் (கி.பி. 1166) குளந்தை ஆண்டார் என்றும் தற்போது தடாகபுரிஸ்வர்ர் என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வூரில் உள்ள இராக்கல் பாறை, சறுக்கும் பாறை ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளும் ஊர்நிர்வாகம், கோயில் நிலதானம் உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டுள்ளன. இக்கோயில் இராஜகோபுரம் விஜயநகர பேரரசர்கள் சம்புவராயர்களை வென்றதன் நினைவாக எழுப்பப்பட்டகோபுரம் ஆகும். இக்கோயில் ஆயிரம் லிங்கங்கள் கொண்ட சகஸ்கர லிங்கம். கல்யாண மண்டபம், சிற்பங்கள், கல்வெட்டுகள் என அற்புதக் கோயிலாக மடம் என்ற ஊரின் நடுவே அமைந்துள்ளது. இது சேத்துப்பட்டு – வந்தவாசி சாலையில் ஏந்தல் கூட்டுரோட்டிலிந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.கங்கை

கொண்ட சோழீஸ்வரர் கோயில், கூழமந்தல்

இராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் அவரது ஞானகுருவான ஈசான சிவ பண்டிதரால் கட்டப்பெற்ற அழகிய கற்றளி கூழமந்தல் கோயிலாகும். கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்து ஆக்கூர் ஊர் அடுத்த பாகூர் நாட்டு நகரம் விக்ரமசோழ கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்று குறிப்பிடுகிறது. கிழக்கு பார்த்த கோயில் இரண்டு தளமுடைய அழகிய ஸ்ரீவிமானமும் அதனையடுத்த அர்த்த மண்டபமும் அடுத்தாற்போல் முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனின் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆகும். கருங்கற்களால் கட்டப்பெற்ற இக்கோயில் சோழர்கால கட்டுமானத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அழகிய விமானம், சிற்பங்கள், கல்வெட்டுத்தகவல்கள் என கண்ணைக்கவரும் வடிவில் அமைந்துள்ளது. தமிழக தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் கூழமந்தல் கிராமத்தில் கிழக்கே 500 மீ தொலைவில் அமைந்துள்ளது.

சந்திரமௌலீஸ்வர்ர் கோயில், பிரம்மதேசம்

சந்திரமௌலீஸ்வர்ர் கோயில்

வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் ஊரில் பிற்காலப்பல்லவ மன்னனால் மணற்கல்லால் கட்டப்பட்ட 3 தளங்களை உடைய சந்திரமௌலீஸ்வரர் என்ற அழகிய கற்றளி அமைந்துள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் ராஜமல்லச் சதுர்வேதி மங்கலம், கரைக்கோட்டு பிரம்மதேயம் என்றும் இக்கோயில் இறைவரை திருப்போந்தை ஆண்டார். என்றும் குறிக்கப்பெறுகின்றது. போந்தை என்றால் பனைமரம். பிரம்மதேசம் என்றால் நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட ஊர் ஆகும். இவ்வூரில் பெருங்குறி மகாசபை என்ற மக்கள் சபை இருந்தது என்றும் இச்சபை இவ்வூரில் நிலதானம் உள்ளிட்ட முக்கிய முடிவுளை எடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறிய மன்னரின் தேவியார் வீரமகாதேவியார் நினைவாக தாகம் தீர்க்க வேண்டி தண்ணீர் பந்தல் அமைத்த செய்திகள், இவ்வூரில் செயல்பட்ட மடங்கள், விழாக்கள் உள்ளிட்ட பல அரிய அரிய தகவல்களை இக்கோயிலிலுள்ள 90 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளால் அறியலாம். இவ்வூரில் அமைந்துள்ள மற்றொரு சிவாலயம் ருத்திர கோட்டீஸ்வர் ஆலயம் ஆகும், இக்கோயிலுக்கு இரண்டாம் குலோத்துங்கன் நேரடியாக வந்து நிலதானங்களைச் செய்தவிவரம் இக்கோயில் கல்வெட்டுகளில் காணலாம். வெம்பாக்கம் வட்டம் காஞ்சிபுரம் – ஆற்காடு நெடுஞ்சாலையில் நாட்டேரி என்ற கிராமத்தின் அருகில் பிரம்ம தேசத்தில் இக்கோயில் அமைந்துள்ளது